நினைவுகள் சிதைந்தது மனம் நிமிர்ந்து நின்றது,
கனவுகள் கலைந்தது புது கற்பனைகள் பிறந்தது,
வித்திட்ட விதைகளும் இன்று விண்ணுக்கு படர்ந்தது,
வேதனையின் வேர்களும் கூட கருகியே அழிந்தது...
உணர்வுக்கு உயிரூட்டி உடலினை மெருகூட்டி,
மனமது தலைதூக்கி தலைக்கனம் வெறுத்தொதுக்கி,
விளையாட்டாய் ஓடிய மனமது,
அர்த்தங்களை தேடிட தொடங்கியது...
கணப்பொழுதில் புது கவிதைகளும்,
கடலலையாய் நிதம் திரண்டிடவே,
கலைமகளுக்கு சிரந் தாழ்த்திய என் வரிகளும்,
தமிழ் அமுதை அழகாய் வார்த்தெடுத்தது...
அன்று சுடுப்பட்ட நெஞ்சம் தினமும் புண்பட்டதும் கொஞ்சம்,
இன்று நான் செதுக்கிடும் வரிகளை இசை மெட்டுகளும் கொஞ்சும்,
மடைதிறந்த நதியலையாய் இனி என் வரிகளும்,
எல்லை இன்றியே எட்டுத்திக்கும் ஓடும்....!
~அன்புடன் கோகுலன்.
வணக்கம் இனிய தோழரே,
ReplyDeleteதமிழால் எம்மை இணைய வைத்த இணையத்திற்கு நன்றிகள்.
இனிய கவிதைகள் ஈனும் உமக்கும் என்ன வணக்கங்களும் வாழ்த்துக்களும். !!
பிழை திருத்துமளவிற்கு நான் புலவன் அல்ல.. என்றாலும் சுட்டிக் காட்டவேண்டிய கடப்பாடுள்ளது. பொறுத்தருள்க...
3 வது பந்தி 3 வது வரி, சிரந் தாழ்த்திய என்று வந்தாக வேண்டும். 4 வது பந்தியில் 3 வது பந்தியில் "நதியலை" .???
நதிக்கேது அலை.ஓடும் நதியில் அலை உருவாவதில்லை.
தொடர்க தமிழ்ப் பணி.
வாழ்த்துக்களுடன்,
நான் தமிழன்,
-சிவ.கஜன்-
நன்றி அன்பரே..
ReplyDeleteவளரும் கவிஞன் தட்டச்சு செய்யும் பொது சில பிழைகள் வருவதுண்டு,
சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி, பிழைகள் திருத்தப்பட்டு விட்டது.
நதியில் அலை உருவாவதற்கு காரணம் கடும் காற்று,
மேலும் இங்கு கவிதையில் மடை திறந்த நதி அலை என்றே குறிப்பிட்டுள்ளேன்..
கவியரசு கூறியது போல் கவிதைக்கு பொய் அழகில்லையா?
தொடர்ந்து என் படைப்புகளை வாசித்து ஊக்கமளிப்பீர் என நம்புகிறேன்...
~அன்புடன் கோகுலன்.