Thursday, December 20, 2012

காத்திருந்த காலம்...

   மாடி 1                                                                                                                                 படி 4

மார்கழி மாத குளிர் மனதோடு ஏற்படும் சில உணர்வுகள், கண்கள் மூடி இமைகள் திறக்கும் முன் சடுதியாக ஓடிவும் நிகழ்வுகள், பெயர் கூறி கூப்பிட பயபட்டவாறு பதுங்கிக்கிடக்கும் தருணங்கள், இவை ஒரு சில இளமையின் அழகிய நிழல்கள்.ஹரியின் வாழ்வில் நடந்தேறிய அவன் வாழ்வின் இனிமையான தருணங்கள், இளம் வயதில் அவன் சந்தித்தப் பெண்ணால் ஏற்பட்ட காதலின் அவஸ்தைகள்.

ஹரி இக்கதையின் கதாநாயகன்,கல்லூரியில் 2ம் வருட மாணவன் திடகாத்திரமான உடல்வாகு,அழகிய தோற்றத்துக்கு சொந்தக்காரன், பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒருவன்.அவன் சிரிப்பு,பேச்சுக்கு மயங்காத பெண்களே இல்லை, ஆனால் உண்மையான ஒரு காதலை கண்டிராத மனம் கொண்டவன். கண்னனுக்கேற்ற ராதையை தேடித்திரிந்தான். நேஹா, திறந்திருக்கும் கண்களின் விம்பங்களை நிரப்பிச் செல்பவள், தேவதைக்கான விளக்கத்தை தருபவள். தொடுவானத்தில் பூத்த வெண்ணிலவால் செதுக்கி சிலையாக உருவாக்கப்பட்டவள். எந்த ஆணிடமும் இலகுவில் சிக்காத அழகியப் பூங்கொத்து, ஹரி படிக்கும் அதே கல்லூரியில் 2ம் வருட மாணவி ஆனால் வேறுப் பிரிவு. காலம் இவர்கள் இருவரின் வாழ்வில் செய்த குழப்பங்களின் தொகுப்பு உங்களுக்காக செதுக்கப் போகிறேன்.

கல்லூரியில் புதியவர்களை வரவேற்கும் நிகழ்வு அதற்கான குழு நியமிப்பு கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தேர்ந்தெடுத்திருந்தது. நேஹா தனக்கு தலைமை பதவி கிடைக்கும் என எதிர்ப்பாத்திருந்தாள். அறிவிப்பாளர்  உபத்தலைவர் "நேஹா கிருஷ்ணன்" என்றார் , திடுக்கிட்டாள், குழப்பத்துடன் மெதுவாக மேடைப்படி ஏறினாள். எல்லார் மனதிலும் ஒரு கேள்வி, "தலைவர்?". அறிவிப்பாளர், "இவ்வருடம் தலைமை பொறுப்பை தட்டிச் செல்பவர்" ஓர் அமைதி "ஹர்ஷன் ராம்", ஹரி ஒரு புன்சிரிப்புடன் எழுந்தான் மேடையை நோக்கி நடந்துவந்தான். நேஹா குனிந்த தலை நிமிர்ந்தாள், அவள் விழிகளை ஹரியின் முகம் ஆண்டுக்கொண்டிருந்தது. அவள் இதழ்கள் ஆச்சரியத்துடன் திறந்தது. அவன் அவளை நோக்கி வந்து அவளை வாழ்த்தக் கைகொடுத்தான் அவளும் கைகுலுக்கிவிட்டு கையெடுத்தாள். இருவரின் உடல்களுக்குள் ஏற்பட்ட அந்த முதல் ஸ்பரிசம் காதலை உதிக்கச் செய்தது. இருவரும் ஏதோ மயக்கத்தில் ஆழ்ந்துப் போவதாக உணர்ந்தனர் முதல் பார்வை, முதல் காதல் இருவர் மனதிலும் உருவானது. கல்லூரி நாட்கள் அவர்களை முகவும் நெருக்கமாக்கியது. மிகவும் நெருங்கிய நண்பர்களானார்கள், அந்தக் காதலர்கள். அவள் கொண்டு வரும் மதிய உணவை அவன் ஊட்டிவிட உண்டு மகிந்தாள். ஹரி அணியும் ஆடைகள் அவள் விருப்பப்படி அமைந்திருந்தது. அவளது இதயம் முழுவதும் அவன் உருவம், அவளை உலுக்கி எடுத்து.

ஹரி பேசும் வார்த்தைகள் கவிதையாக உருமாறியது. அவன் பாடும் பாடல்கள் காதலைப் போற்றிடத் துவங்கியது. இசையில் ஏற்கனவே ஆர்வம் உள்ள அவன் அவளுக்காக பாடலும் இயற்றியிருந்தான். நாட்கள் கடந்தது நெருக்கமான உறவுகள் காதலைத் தம்முள் ஆழப்புதைத்துக்கொண்டனர். உறக்கமில்லாத இரவுகள்,செல்லிடத்துள் புதைந்த மௌனங்கள்,சிரிக்கையில் இனித்திடும் நொடிகள், அவளைப் பார்க்க ஓடிவரும் வைகரைப் பொழுதுகள், பிரிந்து செல்லும் போது ஏற்படும் வலிகள் என காலம் அவர்களின் வாழ்கையைக் கவிதைகள் ஆக்கியது. செந்தேனை வார்த்திடும் அந்நாட்கள் ஒரு மெல்லிசையை மீட்டியது.

பூங்காற்றைக் கூட ரசித்து வாழ்ந்தன அந்தக் காதல் பறவைகள், ஹரியின் கைகோர்த்து நேஹா நடக்கையில் உலகத்தை இருவருமே மறந்தனர் அவளைத் தொடும் பொது அவன் உடல் சிலிர்த்திடவே தொடங்கியது. அவன் காதலைச் சொன்ன நாள் ஜூன் 7, அன்று காலையிலேயே கல்லூரியை அடைந்தான். அவள் வரும் வரை காத்திருந்தான் வெள்ளை சுடிதாரில் தேவதைப்போல் அவள் வந்தால். மெதுவாக அவன் முன் வந்து புன்னகையால் அவனைக் கைதுச் செய்தாள். அவள் முன் ஹரி மண்டியிட்டான்,அவன் திட்டப்படி அவன் நண்பர்கள் இசைமீட்டிடத் தொடங்கினர், வலக்கையில் அவன் வைத்திருந்த ரோஜாவை அவள் முன் நீட்டி , என் வாழ்க்கையை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறாயா? என்றான், கண்களில் கண்ணீர் சொட்ட அவனைக்கட்டியணைத்து, அவன் இதழ்களை நனைத்தாள். காதல் வானில் சிறகடிக்கத் தொடங்கினர்.

அழகாய் ஓடிய நாட்களில் அவர்களின் காதலில் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படத் தொடங்கியது. அவர்களின் காதல் உறவு நேஹாவின் வீட்டுக்கு தெரியவந்தது மிகப்பெரிய குடும்பம் அவளுடையது, எல்லாரும் கூடி அவளை சரமாரியாக வசைப்பாடத் தொடங்கினர்.

அவள் தந்தை அவளிடம், "உனக்கு அவனை பிடிச்சிருக்கா? அப்ப அவன் தன என் மருமகன் நீ ஒன்னும் யோசிக்காதம்மா எல்லாம் நல்லப் படியா  நடக்கும்"என்றார். அவள் அம்மாவும் அவளை அன்புடன் அரவணைத்தார், "இவங்களப் பத்தி நீ ஒன்னும் யோசிக்காத அவன் உன்னை உண்மையாகவே விரும்பிறதா இருந்தா நாங்க உன் ஆசைக்கு குறுக்க வரவே மாட்டோம்" என்றார். ஆனால் அவளின் சொந்தங்கள் அவளை எச்சரித்ததை கண்டு ஹரிக்கு எதாவது ஆகிவிடுமோ என பயந்தாள், அவனுக்கு தொலைப்பேசி அழைப்பு எடுத்தாள்," என் கூட இனி பேசாதிங்க, இது தான் நான் உங்ககூடப் பேசும் கடைசி தடவை,இனி நான் உங்கக்கூடக் கதைக்க மாட்டேன், நீங்க உங்க படிப்பு முடிச்சப்பிறகு வீட்ல வந்துக் கதைங்க, இன்னும் ரெண்டு வருஷம் தானே" என கூறி விட்டு அழைப்பை துண்டித்தாள். அவன் அவளிடம் எவ்வளவோ கதைக்க முற்பட்டான், அவள் அந்த அழைப்புகளை கண்டுக்கொள்ளவே இல்லை. ஒரே ஒரு குறுந்தகவல் அவன் தொலைப்பேசிக்கு வந்தது அவளிடம் இருந்து,"என்னை வெறுத்திட முயற்சிசெய்யுங்கள் - நேஹா"...

இரண்டு வருடத்துக்குப் பிறகு...

நேஹா அவள் வீட்டில் மிகவும் ஆனந்தத்துடன் காத்திருந்தாள், இன்று தான் அவள் தந்த இரண்டு வருடத்தின் முடிவு, அவன் கதைப்பான் என காதலுடன் காத்திருந்தாள்... அவன் வரவே இல்லை, அழைப்புகளும் இல்லை, முகப்புத்தகம், குறுந்தகவல் எதற்கும் மறு பதில் இல்லை, அவளுக்கு ஹரியிடம் பேசாமல் இருக்க முடியவில்லை, அவளின் பெற்றோரின் சம்மதத்துடன் அவனைக்கான விரைந்து அவன் வீட்டுக்குச் சென்றாள். அவன் வீடுப் பூட்டிக்கிடந்தது. அவர்கள் எங்கே என அயலவர்களிடம் விசாரித்தாள். அவர்கள் கோயிலுக்கு போய்விட்டார்கள் என்றனர். ஒரு பதப்பதப்புடன் கோயிலுக்கு விரைந்தாள். அங்கு அமைதியாகப் பூசை நடந்துக்கொண்டிருந்தது, அருகே சென்றாள், அவனைக்கண்டு பின்புறமாகச் சென்று தொட்டாள் அவன் திரும்பினான், அது ஹரி அல்ல ஹரியின் தம்பி, இவள் கேள்வியுடன் "ஹரி?" என்றாள், திரும்பியவன் சற்றே விலகினான் அங்கு ஹரியின் படத்துக்கு மாலையிட்டு இருந்தனர், இது ஹரிக்கு 2ம் வருட நினைவஞ்சலி, அவள் அங்கேயே மயங்கி வீழ்ந்தாள்...

இரண்டு வருடத்துக்கு முன்பு அவள் "என்னை வெறுக்க முயற்சி செய்யுங்கள்" என்று ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் அல்லவா? ஹரி இதுவரை நேஹா கூறி எதையும் செய்யாமல் இருந்ததில்லை ஆனால் அவளை வெறுக்கும் அளவுக்கு அவன் மனம் கல் போன்றது அல்ல, உண்மைக்காதல், அதுவும் முதல் காதல், அவன் இதுவரை வேறேந்தப்பெண்ணையும் கடைக்கண்ணால் கூட பார்த்ததில்லை. அவளின் குறுந்தகவல் படிக்கும் நேரம் அவன் பாதையின் ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்தான். அவளை வெறுக்கமுடியாது என முடிவெடுத்தவன் பாதையின் குறுக்கே நடந்து விட்டான், 3 வாகனங்களில் மோதியவன் உடல் பாதையில் வீழ்ந்தது, "நேஹா உன்னை வெறுக்க ஏலாதும்மா மன்னிச்சிரு..." எனக் கூறியப்படி உயிர் பிரிந்தது...

"காதல் காலமிருக்கும் வரை காத்திருக்கும்,
ஆனால் காலம் காதல் வரும்வரை காத்திருப்பதில்லை"

~அன்புடன் கோகுலன்.

Friday, December 14, 2012

வலி...


போற்ற தேவையில்ல கண்ணே,
தூற்றாதிரு நித்தோம் முன்னே,
விளையும் நிலமடி பெண்ணே,
முத்து குளிக்கயில மூழ்கி செத்தனே....

பொங்கி வச்ச சோறு நான் தொடவே கசக்குது,
நெஞ்சு குழிக்குள்ள ஒரு ஜீவன் தவிக்குது,
ஊரு சனம் எல்லாம் நம்ம பொலப்ப பாத்து சிரிக்குது,
எழும்பிட நினச்சவன ஆறடிகுள்ள அடக்குது.....

சின்னஞ்சிருசு கூட என்ன கண்டா ஒதுங்குது,
கட்டையில போக கூட வழியின்றி ததும்புது,
மொத்ததுல நானோ என்ன சொல்லி பொலம்புறது,
பேசயில கூட சத்தம் வர மறுக்குது....

கொலகுத்தோம் செஞ்சவன் கூட சந்தோசமா திரியுறான்,
ஒருக்க தோத்துப்புட்டு தெனமும் சாகுரனே நெதமும்....
செதறுன என்ன சேத்து வைக்க தேவல,
செரகொடிஞ்ச பறவய பறக்க விட இங்க யாருமில்ல...

~அன்புடன் கோகுலன்.

அன்பே!


உன் கண்கள் கண்ட நினைவுகள்,
 உன் சாலைகள்  கடந்த பொழுதுகள்,
உன் வீட்டினில் கழித்த நிமிடங்கள்,
 தினம் தேனாய் ஊறுது அன்பே.....

மனதுக்குள் காதல் பூத்த தருணங்கள்,
 கனவுக்குள் உண்டான நெருக்கங்கள்,
விழிகளுக்குள் வரைந்த உன் விம்பங்கள்,
 காலம் அது நிதம் இனிக்குது அன்பே.....

சில்லிடும் தென்றலில் நடந்த நொடிகள்,
 வெண்பனியில் ஒளிந்திருந்த தடவைகள்,
கல்மேலே தாவித் திரிந்த காலங்கள்,
 நினைக்கையில் சிரிக்கிறேன் அன்பே.....

பெண்ணாக பிறந்தது உன் தவறா?
 நான் ஆணாக பிறந்தது என்ன சதியா?
நமக்குள் காதல் வந்ததென்ன விதியா?
 உண்மை நீ சொல்லடி அன்பே.....

~அன்புடன் கோகுலன்.

Thursday, December 13, 2012

யாரோ அவள்?



மறைந்திருக்கும் உன் முகம் பார்க்க,
 மனமோ மயிரிழையில் ஊசலாடுது,
மானிடத்தின் மலைகுருவியாய்,
 மங்கையவள் மாதவியாய் தோன்றியவள் அவளோ?

உன் கண்கள் தினம் காக்க,
 இமைகள் ஆகிட என் இருதயம் துடிக்குதே,
என்னை விலகிட துடிக்கும் உன் கூந்தலுக்குள் பதுங்கிடும்,
 பூவாய் மாறிட என் மனமும் தவிக்குதே...

வேடங்கள் இட்டு வேடிக்கை காட்டுகிறாய்,
 என் உயிரோ வேதனைக்குள் வெந்திடுத்தே,
வேரோடு கொய்த மரமாக நானும்,
 நீர் காண பயிர் நிலமாய் வாடினேன் தினமும்...

மயிலிறகால் வருடிச்செல்லும் மாருதமாய் நீயும்,
 மணிக்கணக்காய் காத்துக்கிடந்தேன் மணிக்குயிலாய் நானும்,
கல்போன்ற மனமோ கரைந்துவிட்ட நிலையில்,
 சிறகொடிந்த பறவையாய் தவித்திருக்கிறேன் தினமும்...

~அன்புடன் கோகுலன்.

Tuesday, December 11, 2012

விதியா? விடுகதையா?


தீயிலே வாழ்கிறேன் மௌனத்தில் சாகிறேன்,
பேதையாய் திரிகிறேன் போதையை வெறுக்கிறேன்,
தேடல்கள் முடிகிறதே சிரசும் வலிக்கிறதே,
ஆயிரம் கோடி பிழைகளும் என் கழுத்தை நெரிக்கிறதே...

கடவுளை மறுத்தாலும் மறக்கவில்லை எக்கணமும்,
ராஜ்யங்கள் தேடியே அடங்கிவிட்டேன் இடுகாட்டிலே,
மனமிங்கு தடை பல உடைத்தாலும்,
விடை இன்றி வாழ்கையும் வெறுக்கிறதே...

கவலைகள் கானகத்துக்கு வழி காட்டும்,
மதி தனை விதியதும் மூடிவிடும்,
வேரின்றி மரம் மட்டும் என்ன செய்யும்,
கருகிட தனிமையில் துடித்து நிற்கும்,

ஏழையாய் பிறந்தாலும் மன்னனாக துடிக்கிறோம்,
தொடர்கதை இங்கு முடிவேது பிறகு ஏன் வருந்துகின்றோம்,
கோடி விளக்குகளும் இரவுகளை மாற்றுவதில்லை,
மன மாரும் நேரம் எம்முயிருக்கு இப்பூமியில் இடமுமில்லை....

~அன்புடன் கோகுலன்.

Monday, December 10, 2012

என் தோழன்...


நிழலாய் மாறியே தினமும் குடைப்பிடித்தாய் தோழா,
நான் கண்கலங்கும் வேலை நீ அழுதாயே தோழா,
என் தவறுகளுக்கு நீ தண்டித்துக் கொண்டாயே தோழா,
நினைவுகள் என் கனவுகளில் உன் சிரிப்பை காட்டுதே தோழா..

உன் தோழில் சாய்ந்தேன் கவலைகள் மறந்திட,
உன் சோற்றைப் பகிர்ந்தேன் என் பசியைப் போக்கிட,
உன் வீட்டில் உறங்கினேன் உண்மைகள் பகிர்ந்திட,
உன் விளக்கிலே படித்தேன் என் வாழ்க்கை விளங்கிட...

நட்புக்கு இலக்கணமில்லை விளக்கிட வழிகளில்லை,
விளக்கிட நான் துடித்த வேலைகளில் வலிக்குதே என் மூளை,
இருளை நான் கண்டது இல்லை தோழா,
என்னுடன்  என் பாதைகளில் நீ  தொடர்ந்திடும் போது...

எண்ணங்கள் மேலோங்கிட செய்தவன் நீயே,
அலை மோதிய என் கனவுகளை நனவாக்கியவன் நீயே,
கோடிப் பேர் கொண்ட உலகத்தில் எனை நாடியவன் நீயே,
உலகமே இருண்டிடும் போதும் என்னுடன் உலகை வெல்ல துடிப்பவன் நீயே...
என் தோழன்...

~அன்புடன் கோகுலன்.


Sunday, December 9, 2012

வேகம் குறையபோவதில்லை...


தனிமையில் வாழ்ந்திடு தரங்கெட்டு வாழ்ந்திடாதே,
விதையாய் மாறிடு விருட்சமாய் வளர்ந்திடு,
அமைதியாய் வாழ்ந்திடு அடங்கிட மறுத்திடு,
வேகத்தை கூட்டிடு வேலையை கூட்டிடு...

இளமையை புசித்திடு ரத்தத்தையும் ரசித்திடு,
சித்தனாய் உயர்ந்திடு நித்திரையிலும் விழித்திடு,
புத்தனாய் பொறுத்திடு யுத்தங்களையும் விரும்பிடு,
வித்தகனாய் இருந்திடு விஞ்ஞானத்தையும் விளக்கிடு...

தடைகளை உடைத்திடு தரிப்பதை தவிர்த்திடு,
அரசனாய் வாழ துடித்திடு அடிமைத்தனம் வெறுத்திடு,
தீமையை தீயிலிடு தீது செய்வாரை தீண்டாதிரு,
நரகத்தில் வாழ்ந்திடு நன்மைகளை புகட்டிவிடு...

வீழ்ந்திடும் ஒவ்வொரு முறையும் விழுதாய் மாறிடு,
மேதையாய் மாறிடு மேகத்தையும் வீடாய் மாற்றிடு,
சாலையில் வாழ்ந்தாலும் சரித்திரம் படைத்திடு,
மடமைகளை மறந்திடு மனிதனாய் வாழ்ந்திடு!

~அன்புடன் கோகுலன்.

Tuesday, December 4, 2012

ஒரு கதை...


படிக்க தொடங்கி 5 நிமிடம் கூட ஆகவில்லை, தூக்கம் கண்ணை மிருதுவாக வருடுகிறது. என்ன செய்ய? பொதுவாக இளம் வயதில் உள்ள பலரின் பரம்பரை நோய் இது. கையடக்கத் தொலைபேசியில் கோலமிடத் தொடங்கியது விரல்கள், இசையில் நனையலாம் என பாடல்கள் சில தேடினேன் காதல் பாடல்களின் தொகுப்பே அதிகமாக இருந்தது, உனது தொலைப்பேசித்தானே நீ தானே அதில் அந்த பாடல்களைச் சேமித்திருப்பாய் என நீங்கள் கேட்க்கக் கூடும். உண்மைதான் தமிழ் திரையிசைப் பாடல்களில் நம்மில் பலரின் மனதை கவருவது ஏனோ இந்த வகைப் பாடல்கள் தான். சிறுவயதில் பெரிதாக யாரும் இவ்வகைப்பாடல்களை விரும்புவதில்லை ஆனால் கட்டிளமைப் பருவத்தை தொட்டவுடன் பெண்களை நோக்கி எம் பார்வையில் அப்பப்பா எவ்வளவு காதலடா? அதோடு மனது காதல் பாடல்களின் வசம் ஈர்க்கப் படுகிறது, ஒவ்வொரு வரியையும் ரசிக்கத் தொடங்குகிறது, சில நேரம் மனனம் கூட செய்து விடுகிறது மனது - நாம் அல்ல மனதே...

ஐயோ பாவம் யார் செய்த தவமோ? யார் அளித்த வரமோ? தெரியாது மானுடரில் பலருக்கு இப்படி நடக்கிறது. பாடல்களோடு மட்டுமல்ல காதல் திரைப்படங்கள்,புத்தகங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,மிகவும் முக்கியமாக சிலரின் அனுபவங்கள், இவ்வாறு வகைப்படுத்திக்கொண்டே போகலாம். காதல் அற்புதமான உணர்வு, கள்ளங்கபடமில்லாதது, கடவுளுக்கு அடுத்தப்படியாக எம்மில் பலர் அடிபணிவது, துன்பத்தில் கூட ஒரு இன்பத்தை விரும்புவது,மனிதனுக்கு மட்டும் உணர்வுகளால் உயிரூட்டப்பட்டது, ஆக்கத்துக்கும் அழிவுக்கும் கூட அழகாய் பாதை அமைப்பது,சின்னச் சின்னத் தவறுகளைக் கூட நேசிக்கச் செய்வது, மனிதனை ரசிகனாக்குவது என பலவாறு கூறலாம். இவை பொது கருத்துகள், என் சுய கருத்துகள் மனதில் பட்டதைக் கூறினேன். அதிகமாக பிதற்றாதே விடயத்துக்குவ என சிலர் கூறுவது காதில் படுகிறது. என்னை போல் தமிழை நேசிக்கும்,"காதலிக்கும்" என் வாசர்கர்களுக்காக ஒரு அழகிய கதைக் கூறப் போகிறேன். பலர் என்னிடம் கேட்டது, அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல, இதில் உங்கள் கதையும் கூட அடங்கியிருக்கலாம். பலரும் மிகவும் ரசிக்கும் ஒரு கதை ஒரு சிலரின் வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் ஒரு பகுதியை முற்றிலும் அழகாக்கிடும் நிகழ்வு, என் கற்பனைகளின் கோர்வையாய் இலக்கிய பசிக்காக நீங்கள் ருசித்திட இங்கு பிறக்கப் போகிறது...

பாடசாலைக்காலம் வகுப்புக்குள் ஒருவன் நுழைகிறான், எண்ணை தோய்த்து வாரிய தலை, மிகவும் நேர்த்தியான உடல் வாகு, மெலிந்த தோற்றம் கொண்டவன், நுழைந்தவனை நண்பர் பட்டாளம் தங்கள் கதைக் கூட்டணிக்குள் இணைத்துக்கொண்டனர், கதைகளில் ஆழ்ந்து போனவனின் கண்கள் மட்டும் ஒரு தேடலைத் தொடங்கியது பெண் பிள்ளைகளின் பக்கம் நோக்கி அலைப்பாய்ந்தது, அவளை கண்டுக்கொண்டுவிட்டான், மனதுக்குள் ஓர் சிரிப்பு, "பார்ப்பாயா அன்பே?" ஒரு ஏக்கம், அவளும் பார்த்தாள் வழமைப்போல் மெல்லிய சிரிப்பு, அவனுக்கோ உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்து போல ஓர் உணர்வு, இவனும் பதிலுக்கு சிரித்து விட்டு ஓரிரு வார்த்தைகள் கதைத்தான் அந்த உரையாடல் அவனை நண்பர் மத்தியில் இருந்து தனியே பிரித்தெடுத்தது, அழகிய உரையாடல்களின் தொகுப்பு, ஒரு பரவசநிலை, சிலருக்குத் தான் அந்த பாக்கியம் கிடைக்கும், இவன் மனதில் காதல் அவள் மனதில் சராசரி நட்பு அவ்வளவு தான் இவ்விருவரினதும் உறவு, இவ்வாறான நிகழ்வுகளால் அவர்களின் காலம் இனிதாய் நகர்ந்தது...

இவன் பலமுறை தன் காதலைச் சொல்ல எத்தனித்தும் ஏதோ ஒரு சக்தித் தடுத்து. நட்பு வட்டாரம் கிண்டலடித்தது ஆனால் இவனோ வெறும் நட்பு தான் என ஏமாற்றிவிட்டான், பொதுவாக பலரும் செய்யும் ஒரு சாமர்த்தியம். அதில் எந்த பிழையுமில்லை காரணம் காதல் என நாம் ஒப்புக் கொண்டால், ஒருவேளை அவ்விடயம் அந்த பெண்ணுக்கு தெரிந்து நட்பும் உடைந்துவிட்டால்? அவன் மனது எவ்வளவு கஷ்டப்படும்? ஆகவே இவ்வாறன பதில்கள் பலருக்கும் ஒரு பாதுகாப்பு தான்.

அவள் வேறு ஆண்களோடு சற்று சிரித்தே கதைக்கும் பொது அவன் மனம் பதபதைக்கும், இதயம் கண்ணீர் விட்டலும் உதடுகள் மட்டும் போலியான சிரிப்பை மௌனத்துடன் தழுவும். மூளை திருகிக் கொள்ளும், செய்வதறியாது திகைத்து நிற்கும். இப்படியே விட்டால் தான் பைத்தியமாகி விடுவேன் என யோசித்தான் அவளுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினான், அவளுடன் உரையாடும் நேரத்தை அதிகரித்தான், அவள் வருமுன் பாடசாலை சென்றடைந்தான் யன்னல் ஓரம் விழிகளை தேக்கி வழிமீது தேங்கிக் கிடந்தான். அவளைக்கண்டவுடன் புன்னகைத்து, கையசைத்து உரையாட தொடங்குவான்...

பலநாள் தனிமையில் இவ்விருவரினதும் உரையாடல்கள் தொடர்ந்தது, அது அவர்களை மிகவும் நெருக்கமாக்கியது, செல்லிட தொலைப்பேசிகள் அழகிய குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ளத் தொடங்கியது. அவர்களின் குறுந்தகவல்கள் மிகவும் நெருக்கமான ஒரு உறவை பிரதிப்பளித்தது. இவனது தகவல்கள் நட்பு சாயம் பூசி காதலை  சுவைத்திருக்கும், அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்து, அவனின் செயல்களை ரசிக்கத் தொடங்கினாள், அவனுடன் இருப்பதை மிகவும் விரும்பினாள், உரிமையுடன் கை கோர்த்து திரியவும் செய்தாள்  எனினும் காதலைச் சொல்ல மறுத்தாள்...

உறவுகள் மிகவும் நெருக்கமானது, எனினும் இருவர் மட்டும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பாடசாலை முடிவு பிரிவுகளின் ஓர் அத்தியாயம் கட்டாயம் எல்லோரும் சிதறிச் செல்ல வேண்டியத் தருணம், இரு உள்ளங்கள் மட்டும் செய்வதரியாது திகைத்திருந்த நிமிடம். இன்று சொல்லிவிடுவோம் என முடிவெடுத்தான், அவள் அருகில் சென்றான், கூறிவிடுவோம் என முற்படுகையில், அவளின் செல்லிடம் அழைப்பு மணியை உமிழ்ந்தது, தயக்கத்துடன் அவனை பார்த்தவள் சைகை காட்டி விட்டு கதைக்க தொடங்கினால் தொலைப்பேசியில், சில நிமிடங்களின் பின்னர் சிரிப்புடன் முடித்தவள் என்ன விடயம் என கேட்டாள், அப்போது அவனின் நண்பன் அவசரமாக வந்து அவனைக் கூப்பிட அவளை அங்கேயே நிறுத்தி வைத்தவனாய் சென்றுவிட்டான். அவளுக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் தொடங்கியது சில மணி நேரம் காத்திருந்தவளுக்கு பயமும் அதிகரித்து எங்கே அவன் பிரிந்து விடுவனோ என்று அவள் உள்ளம் அழுதது...

அவன் வந்தான் அவளை தனிமையில் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றான். தைரியமாக அவளின் கண்களை பார்த்து இவ்வாறு பேசத்தொடங்கினான், " நான் பல பிரிவுகள பார்த்தவன் தான் ஆனா இன்னைக்கு ஏதோ ஒரு புது பயம், என்னைக்கும் இல்லாத ஒரு நடுக்கம், ஒவ்வொரு நாளும் ஒருத்தர பார்குறதுக்காக வாறேன் அந்த சந்தோசம் இனி இருக்காதுன்குற வேதனை இருக்கு, அவங்கள பார்க்க முடியாதேங்குற கவலை இருக்கு, பலமுறை என் செயல்கள் அவங்கள காயப்படுத்தினாலும் அதுக்காக மன்னிப்பு கேட்டு கேஞ்சுரப் போதுள்ள சுகம் இனி இருக்காதுன்குற பயம் இருக்கு, அவங்க கண்கள இனி பார்க்க முடியாம போய்விடுமோ? என்கிற தவிப்பு இருக்கு, சிரிப்ப புதுசா உணர வச்ச அவங்களோட சிரிப்பா இனி பார்க்க முடியாதோ? என்னும் சலனம் இருக்கு, என்னை அப்படியே ஏத்துக்கிட்ட அவங்க இனிமேலும் என் கூட இருபாங்களாங்குற கேள்வி எனக்குள்ள இருக்கு, அவங்க என் மேல வச்ச நட்பு என்னை விட்டுட்டு விலகிடுமோ? என்கிற அங்கலாய்ப்பு இருக்கு, எல்லாத்துக்கும் மேல என் காதல் அவ ஏத்துகுவாளா? என்னும் சந்தேகம் எனக்குள்ள இருந்து தினம் தினம் என்னை கொண்ணுக்கிட்டு இருக்கு..." என அவன் கூறி முடிக்க அவன் கண்களில் கண்ணீர், அதை துடைத்த அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளின் கன்னங்களை ஈரமாக்கியது, சில நொடிகள்  நீடித்தது மௌனங்கள், அவளின் உதடுகளில் அழகாய் ஏற்பட்டது நடுக்கங்கள், காதலால் நிறைந்தது அவள் விழிகள், ஏங்கி தவித்த அவன் காதலை அவள் இதயம் ஏற்றுக்கொண்டது...

~அன்புடன் கோகுலன்.